மலேசியத் தமிழ் இளையோர் - தமிழ்நெற் சிறப்புக்கட்டுரை
&posturl=http://thunaippathivuhal.blogspot.com/2007/12/blog-post.html&cmt=0&blogurl=http://thunaippathivuhal.blogspot.com/&photo=">மலேசியத் தமிழ் இளையோர் [TamilNet, Friday, 21 December 2007, 17:01 GMT] மலேசியத் தமிழ் இளையோர்: பண்பாட்டு-வலுவாக்கச் சிக்கல் இன்றைய உலக விமானப் போக்குவரத்தின் தலைசிறந்த மையங்களுள் ஒன்று, கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம். இதன் பயணிகள் அகலும்/இடைமாறும் கட்டிடத்தை ஒரு குறு நகரம் என்றே சொல்லலாம். இருப்பினும், மலேசியாவின் பன்மைப் பண்பாட்டுடன் பழக்கமுடைய எவரும் வினவக்கூடியது என்னவென்றால், இங்குள்ள கண்கவர் இன உணவு, விநோதப்பொருள், சர்வதேசச் சரக்கு அங்காடிகளில் இந்நாட்டின் மக்கட் தொகையில் ஏறத்தாழ 9 வீதம் கொண்ட தமிழ்ச்சமூகம் ஏன் முறையாக பிரதிபலிக்கவில்லை என்பதே. தமிழர்கள் நடத்துவது என்று ஒரு புத்தகசாலையைத் தவிர வேறு விற்பனை நிலையங்கள் எதுவும் இங்கு இருப்பதாகவும் தெரியவில்லை. உலகத்தின் மொழிகளில் நூல்கள் அடுக்கப்பட்ட இக் கடையிலும் ஒரு தமிழ் நூலைக் காணக் கிடைக்கவில்லை. இவ்வாறிருக்க, விமான நிலையத்தின் பெருந்தொகையான கழிப்பிடங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்பவர்கள் மட்டும் தமிழர்களாகவே காணப்படுகிறார்கள் என்பது ஒருவருக்கு ஆச்சரியம் தரக்கூடியது. நவீன மலேசியாவின் சமூகங்களுக்கிடையிலான அபிவிருத்தி பேதங்களை பிரதிபலிக்கும் உதாரணக் காட்சி இது; பிறர் எவரும் வெளிப்படையாகவே விளங்கிக் கொள்ளக்கூடியது. * * * வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், மகாத்மா காந்தியின் படத்தையும் பிரபாகரனின் படத்தையும் தாங்கிச்சென்றார்கள் என்று எமக்குச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு, இந்தியாவிலும் இலங்கையிலும் மலேசியாவிலும் பயப்பிராந்தியடைந்த பிறழ்வு சக்திகள் அவசர முடிவுகளுக்குத் தாவினர். இலங்கைக்கு அப்பாலும் தமிழ் அடையாளத்துக்கு பயங்கரவாத முலாம் கொடுக்கும் முயற்சிகள் இப்பொழுது ஆரம்பமாகிவிட்டன. போராட்டத்தில் தங்களுக்கு இருக்கக்கூடிய மாற்றீட்டு வழிகளை உருவகப்படுத்தும் எதிர்மறைக் குறியீடுகளாகவே இப்படங்கள் இளையோரால் எடுத்துச்செல்லப்பட்டன என்று சொல்லப்படுகிறது. அப்படியாயின் இந்நிகழ்வின் பகுப்பாய்வு புலப்படுத்துவது என்னவென்றால், இளையோரின் கோபமும் விரக்தியும் உண்மையில் மலேசியாவுக்கு எதிராக என்பதிலும் பார்க்க இந்தியாவுக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், காந்தியை இரகசியமாகவும் பிரபாகரனை வெளிப்படையாகவும் வெறுக்கும் இந்தியாவின் இன்றைய அதிகார வர்க்கத்துக்குத் தான் இக்குறியீடுகளின் உட்பொருள் விசேடமான எதிர்மறைத் தத்துவங்கள். ஆர்ப்பாட்டப் போராட்டத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் இந்து அடையாளம். இந்த அடையாளத்தை போட்டுக்கொள்வதால் இந்தியாவிடம் இருந்து கூடிய கவனிப்பும் உதவியும் வரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைத்திருந்தால் அது அவர்களின் பாரிய பிழை. மலேசியத் தமிழர்களின் பூர்வீகமானது, இந்திய அதிகாரவர்க்கத்தின் அனுதாபத்தைத் ஈர்க்கக்கூடிய மாதிரி, சமூக வகையிலோ பொருளாதார வகையிலோ மேல்தட்டுவர்க்க இந்துக்களிடம் இருந்து வந்ததல்ல. புலம் பெயர்ந்தோர் நலன்களை விற்கும் முயற்சியில் இந்தியாவுக்குத் தான் பேரம் பேசும் பலம் கிடைக்கக்கூடும். இதில் சந்தேகம் இருப்போர் இலங்கையின் மலையகத் தமிழருக்கு நடந்த கதியைப் பார்த்துப் படித்துக்கொள்ளலாம். அவர்களின் உரிமைகள் நேரு காலத்திலிருந்து இந்தியாவின் உலக ஆசைகளுக்காக பரிவர்த்தனை செய்யப்பட்டன. * * * ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் இந்து அடையாளமானது பொருள் வழுவியது. ஏனெனில் தென்னாசியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களை அது உள்ளடக்கவில்லை. மலேசியாவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட தென்னாசியரது பிரச்சனைகளின் தன்மைகளைப் பிரதிபலிப்பதற்கு இந்து அடையாளம் பொருத்தமற்றது. பெரும்பான்மை மலாய் முஸ்லிம்களின் தேவையற்ற காழ்ப்புணர்வையே இது கொண்டுவரும். நாட்டுக்குள்ளும், உலக அரங்கிலும் மத உணர்வுகளை அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்த விழைவோருக்கு உதவிசெய்யும். சமய அடிப்படைவாததத்திற்கு அப்பால் சென்றால் தான் அதை எதிர்க்கமுடியும். தமிழர் பண்பாடானது அதன் நீண்ட பாரம்பரியத்தில் என்றும் ஒரு சமயத்திற்கு உரியதன்று. பௌத்தமோ சமணமோ இந்துவோ கிறிஸ்தவமோ இஸ்லோமோ அல்லது நாஸ்திகவாதம் தானோ, உலகின் அனைத்துச் சமயங்களுக்கும் தமிழ்மொழி ஊடகமாகப் பயன்பட்டிருக்கிறது. * * * ஆங்கில கிழக்கிந்திய கம்பனியின் கேணல் றபிள்ஸின் லெப்டினன் நாராயணசாமிப்பிள்ளை, தனது சொந்த ஊராகிய நாகப்பட்டினத்தில் இருந்து உழைப்பாளிகளைக் கொண்டுவந்த காலத்தில் இருந்து, “நீரிணைக் குடியிருப்புக்கள்” என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தகரச்சுரங்கங்களிலும் றப்பர்த் தோட்டங்களிலும் வேலைசெய்ய இந்தியாவில் இருந்து பெரும்பாலும் வந்தவர்கள், பஞ்சத்தால் அடிபட்ட கிராமங்களில் இருந்து வந்த வறிய ஒடுக்கப்பட்ட தமிழர்களே. இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் கூட முக்கியமாகக் கருதப்படாத தைப்பூசம் எவ்வாறு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்துப் பண்டிகை ஆயிற்று என்று இன்று அங்கிருக்கும் தமிழர் கருதக்கூடும். தமிழுக்குத் தை மாசத்தில் பூச நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது வருவதாகிய முழு நிலவு நாள், தேவாரங்களில் சொல்லப்பட்டுள்ள பண்டைத் தமிழ் விழா நாள் ஆகும். தைப் பொங்கல் அன்று வீட்டில் குத்தரிசி பொங்கினால் தைப்பூசத்தன்று கோயிலில் பொங்குவது வழமை. இரண்டுமே பிராமணியம் அற்ற விழாக்களாயினும் பின்னையது தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகம் யாழ்ப்பாணம் போன்ற சில இடங்களில் உள்ள பயிரிடும் சமூகங்களால் மட்டுமே கொண்டாடப்படுவது. இப்பண்டிகை முருகவழிபாட்டுடனும் தொடர்புடையது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இப்பண்டிகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதைக் கொண்டாடும் விதமும், அங்குள்ள பெரும்பாலான தமிழர்கள் எந்த சமூக- பண்பாட்டுப் பின்புலம் உடையவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவன. அவர்களை இயக்கும் ஆழ்மனத்தின் ஐதிகங்களையும் சுட்டுபவை. இப் பின்னணியையும் மனப்பாங்கையும் புரிந்துகொள்வது தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவசியமானது. மலேசிய தமிழ் இளையோரது துயரங்களைக் களைவதற்கு என்ன செய்யவேண்டும் எங்கு போகவேண்டும் என்பதைக் கிரகிப்பதற்கு இது அவசியம். மலேசியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழரது விரக்தி ஒரு தனி விவகாரம் அல்ல. உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர் விடயத்தில் இதே கதைதான். மொரிசியஸில் பெரும்பான்மையான இந்தியர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வால் கடவுளர்களும் கோயில்களும்கூட இந்து என்றும் தமிழ் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. குருத்துவ, வணிக சமூகங்கள் போன்ற மேல்தட்டுவர்க்கத்திற்குரிய தமிழர் சிலரது செழிப்பை மட்டும் வைத்துக்கொண்டு முழுப் புலம்பெயர்ந்த தமிழரையும் எடைபோடலாகாது. * * * மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பெரும்பாலான தென்னாசியர்கள் புலம்பெயர்ந்தது நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து. 10 ஆவது அகலக்கோட்டைப் பின்பற்றிச் செல்லும் கடற்பாதையில் தென்கிழக்காசியா போக வர மிகவும் கிட்டிய துறைமுகம் இதுவே. இங்கிருந்து மிக அண்மைக்காலம் வரை கப்பற்சேவை நடைபெற்றது. இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா சென்ற தமிழர்கள் தங்களை இலங்கையர் என்று அழைத்துக் கொண்டு இந்தியத்தமிழரில் இருந்து வேறுபடுத்தி இருந்து வருகிறார்கள். மலேசியாவில் இருக்கும் இன அடிப்படையிலான ஒதுக்கீடு விவகாரங்களில் இவர்கள் ஒரு சதவிகிதமான ஐரோப்பிய- ஆசியர்களில் (ஆங்கிலோ-இந்தியர், இலங்கையில் பறங்கியர் போல) வைத்தெண்ணப்பட்டுவருகிறார்கள். ஆயினும், இவர்களும் நாகப்பட்டினத்தில் இருந்து சென்றவர்களே. வித்தியாசம் என்னவென்றால், கப்பல் ஏறுவதற்கான இவர்களது பயணம் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமானது. பாக்குநீரிணையின் வாய்ப்பகுதியில் உள்ள இந்த இரண்டு துறைமுகங்களுக்கும் இடைத்தூரம் சில மைல்கள் தான். அந்தக் காலத்தில் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் செல்ல பாய்க்கப்பல் கட்டணம் வெறும் 25 சதங்கள் தான். பிரித்தது சில மைல் தொலைவுடைய கடல்தான் என்றாலும் கூட, இரு தமிழ்ச்சமூகங்களின் அந்தஸ்தில் இருந்த இடைவெளி பாரியது. யாழ்ப்பாணத்தின் கல்விநிறுனங்கள் அதை அன்று சாதித்திருந்தன. இந்தியத் தமிழர்களைப் போல வறுமை யாழ்ப்பாணத்தமிழர்களை உந்தித் தள்ளவில்லை. இன்றைய நிலை மறுதலையானது: உள்நாட்டு யுத்தத்தால் நிர்ப்பந்திக்கப்பட்ட புலப்பெயர்வும் கல்விக்குறைபாட்டின் விளைவால் சீரழிந்த சமகாலப் பண்பாடும் இன்று இலங்கையில் இருந்து உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களைத் துயரப்பட வைத்திருக்கிறது. * * * வளர்ச்சியும் சமூக வலுவாக்கமும் மட்டுமன்றி ஒரு போராட்டத்தை வெல்வதுகூட பொருளாதாரமோ அரசியலோ அல்ல, பண்பாடுதான் என்பதை உணர்ந்துகொண்டால், உலகெங்கும் உள்ள தமிழரது சிக்கல்கள் உள்ளுக்குள்ளேதான் இருக்கின்றன, வெளியில் இல்லை என்பதை விளங்கிக்கொள்வது என்பது சிரமமான காரியம் அன்று. தமிழ்ப்பண்பாடானது மனித குலத்தின் செம்மொழிப் பண்பாடுகளுள் ஒன்று. அதன் சமகால வெளிப்பாடுகளில் குறையிருப்பின் அதை வெட்கப்படாமல் செம்மைப்படுத்தவேண்டும். பொதுமையான பண்பாட்டுச் சிக்கல்களை எதிர்கொள்ள, உலகத் தமிழ்ப் புலம்பெயர்ந்தோர் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் உதவவேண்டும். வளர்ச்சியடைந்த, மற்றும் வசதிபடைத்த புலம்பெயர்ந்தோருக்கு இதை நிறைவேற்றுவதில் கூடிய பொறுப்புக்கள் உள்ளன. பண்பாடு என்பது சாதாரணமாக நாம் புரிந்துகொள்ளும் பொருளில், கோயில், திருவிழா, நடனம், இசை, ஆடை, அணிகலன், காலாவதியான வாழ்க்கை முறைகள் என்றவாறு இங்கு கையாளப்படவில்லை. இன்று, பண்பாடு என்று கருதப்படுவது எவற்றை மையமாகக் கொண்டதென்றால், அவை கல்வி, உடல்நலம், சமூக சமத்துவம், பால்நிலைச் சமத்துவம், சுற்றுச்சூழலுடன் இயைபு, வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், பொருளாதார, மனித வளங்கள், உயர் சமூக ஆக்கம் போன்றவை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சமூகத்தால் முழு மனிதகுலத்திற்கும் என்ன வழங்க முடிகிறது என்பதும் கருத்தில் கொள்ளப்படுகின்றது. இங்கு குறிப்பிட்டவற்றுள் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ கிடைக்கும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்பார்க்கக்கூடாது. பண்பாடு என்று ஏற்றுமதி செய்யப்படுபவை, ஒரு புறம் காலனிய கீழைத்தேயவாதம் மற்றும் பிராமணியத்தின் கோவையாகவும், இன்னொருபுறம் திராவிட இயக்கத்தின் வெற்றுவார்த்தை ஜாலமும் ஊடகமும் ஆகவும் சேர்ந்து இறுதியில் சன் தொலைக்காட்சி ரகப் பண்பாடாக எங்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன. * * * விவகாரத்தை மிக நுட்பமாகக் கையாளவேண்டிய கடப்பாடு திரு. படாவிக்கு உள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வளங்களிலும் பின்தங்கி, சமகாலப் பண்பாட்டைக் கட்டியெழுப்பும் நிறுவனங்கள் தேவைப்படும் ஒரு மலேசியத் தேசிய சமூகத்தின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வால் வந்த சிக்கல் இது. ஏற்றத்தாழ்வு இருப்பது முதலில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஒரு பக்கத்தினர் வன்முறையை வெளிப்படுத்துவதும் மறுபக்கத்தில் ஒடுக்குமுறையால் அதைக் கையாள்வதும் எதிர்விளைவுகளைத் தரக்கூடியவை. முறையான சமூக, பண்பாட்டு, பொருளாதார நிறுவனங்களுக்கு ஊடாக அனுதாபத்துடன் உதவிசெய்து, பலப்படுத்திவிடவேண்டிய தேவையுடனேயே மலேசியத் தமிழர்கள் இருக்கின்றனர். இத்தகைய நிறுவனங்களை தமக்குத் தாமே அமைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு ஏதாவது தடைகள் இருப்பின், அத் தடைகளை அகற்றுவது முதலிடம் பெறவேண்டிய வேலை. மலாய மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைத்தொடர்பு ஆதி மலாய தீபகற்பத்தில் முதல் அரசுகள் தோன்ற உதவின. மலாய் மொழியிலும் பண்பாட்டிலும் தமிழர்களுடனான இடைத்தொடர்பின் தடயங்கள் கணிசமாகவே உள்ளன. மலாக்கா அரசுக்கு இஸ்லாத்தின் அறிமுகம் கூட நாகப்பட்டினத் தமிழர்களின் தொடர்புடையது என்பதை மலேசியாவின் வரலாறு தெரிந்தோர் ஏற்றுக்கொள்வர். இன்றைய தமிழர் மலேசியாவின் ஏனைய இனங்களுடன் காலனிய ஒடுக்கலை பகிர்ந்துகொண்டவர்கள். கடின உழைப்பால் தேசத்தைக் கட்டுவதில் பங்குகொண்டவர்கள். இன்று அவர்களுக்கு உதவி, அவர்களை ஏனைய இனத்தவர்களுக்குச் சமதையாக்கவேண்டிய கடனும் மலேசியாவுக்கு உண்டு. மலேசியத் தமிழ் இளையோரைப் பொறுத்தவரை டெல்லியிலோ சென்னையிலோ உலகின் வேறெங்கோ உள்ள அதிகார பீடங்களிடம் உதவியை எதிர்பார்ப்பது பயனற்றது. சாமியார்களும் இந்திய திரைப்படம் மற்றும் ஊடகங்களும் மலிவான பண்பாட்டு ஏமாற்றுக்கள். விழிப்புணர்வுக்கான இயக்கம் இளையோரிடம் இருந்தே ஊற்றெடுக்கவேண்டும். பண்பாட்டை மீளக்கண்டுபிடிப்பதன் மூலம் சமூகத்தை வலுவாக்கும் விடயத்தில் சிரத்தையுடையோருக்கு உலகின் அறிவுக்களஞ்சியத்தில் சிந்தனைப் பொறிதூண்டும் நூல்கள் நிறையவே உள்ளன. |